திங்கள், 11 ஏப்ரல், 2011

சர்க்கரை நோயா? அப்படீன்னா என்னங்க?

இப்படிக் கேட்ட ஒரு காலமும் உண்டு.
'அப்பிடியா...எப்பங்க?' என்று கேட்பவர்களுக்காக கொஞ்சம் நம் சிந்தனை என்கிற கால எந்திரத்தை உசுப்பேற்றி ஓர் அறுபது வருடங்களுக்குப் பின்னால் செல்வோம்...


வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் நுழைந்தவுடனேயே நீரிழிவு எனப்படும் மேக நோயும் இந்தியாவுக்குள் பாஸ்போர்ட் இல்லாமலேயே வந்து பெருக ஆரம்பித்துவிட்டது.
ஏன் அவங்ய வர்ரதுக்கு முன்னாடியே இது இந்தியாவில் இல்லையா? - என்று கேட்கிறீர்கள் தானே.

ஆமாம் இருந்தது தான். அது வேறு- இது வேறு.
கொழப்புறானே.... (மண்டையைச் சொறிகிறீர்களாக்கும்).

டயாபெடிக் மெலிடஸ் அல்லது டயாபெடீஸ் என ஆங்கிலத்தில் (ரொம்ப பேசனாக டி.எம் என்று சொல்லிக்கொள்ளப்படும்) சர்க்கரை நோய்க்கும் மேக நோய் எனப்படும் சர்க்கரை நோய்க்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது என் கருத்து.
மேக நோய் என்பது உலகம் முழுவதும் இருந்துவந்த தற்காலிகமான ஒரு நோய். குணப்படுத்த பலவித முறைகள் கையாளப்பட்டுவந்துள்ளன. முற்றிலும் குணமடைந்து பல்லாண்டு வாழ்ந்தவர்கள் நிறைய. ஆனாலும் உடலுறுப்புச் சிதைவினால் ஏற்படும் உண்மையான சர்க்கரை நோய் ஒன்றே குணப்படுத்த இயலாத ஒன்றாக இருந்தது, இருந்தும் வருகிறது. கேன்சர் எனப்படும் புற்று நோய் போல இது ஒரு வகையான எதிர்பாராத உடலுறுப்புச் செயலிழப்பினால் ஏற்பட்ட ஒரு ஆரோக்கிய குறைவு நிலை. அதை டைப் 1 டயாபெடீஸ் என்று மேற்கத்தியர்கள் வகைப் படுத்திவிட்டார்கள்.
ஆங்கிலேய அல்லது மேற்கத்திய டயாபெடீஸ் என்கிற சர்க்கரை நோய் ஒரு விவகாரமான வணிக நோக்கிலான நோய். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு விதமான உடல் உபாதை. இதை டைப் 2 டயாபெடீஸ் என மற்றொரு வகைப் படுத்திவிட்டார்கள். இதைத்தான் இன்றைக்கு முழுக்கால் சட்டையப் (அதாங்க பேண்ட்)  போல் எளிதாக உலக மக்கள் உடலில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள். அக்காலத்தில் மதுவும் மாமிசமும் அளவின்றி உண்டுக் கொழுப்பேறிய தனவந்தர்களுக்கு (அரசர்கள், பிரபுக்கள், உல்லாசவாசிகள்) இந் நோய் பற்றி, நோய் நாடி அறியாமலே இறந்தும் , சிலர் மருந்துண்டு பிழைத்தும் போனார்கள்.ஆனாலும் பல்லாயிரத்தில் ஒருத்தருக்குத்தான் இப்படிப்பட்ட உபாதைகள் வந்தன.
சரி சரி! வந்த இடத்தில் என்ன நடக்கிறது பார்ப்போம்.
வீதிகள் வெறுமையாக இருக்கின்றன. எப்போதாவது ஒரு குதிரை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது,  சாலைகளில் மக்கள் ந்டந்து தான் செல்கிறார்கள். கைகளில் எதாவது உணவுப் பண்டம்; பசித்தால் சாப்பிட!. ஓட்டல்கள் சாமானியர்கள் சாப்பிட வராததால் அதிகம் இல்லை.  குடுகுடு கிழடுகளைத் தவிற வீடுகளில் யாரும் இருப்பதில்லை. எல்லோரும் உழைக்கச் சென்றிருக்கிறார்கள். அக்ரஹாரங்களில் மாத்திரம் பெண்கள் அவரவர் வேலைகளை முடித்தவுடன் திண்ணைகளில் ஆர அமர அளாவிக்கொண்டிருக்கிறார்கள். வீதியில் ஓலைக் குட்டானை தலையில் சுமந்தபடி ஒருத்தன் வெல்லம்.. சர்க்கரை என்று கூவிக்கொண்டு போகிறான். இவர்களைப் பார்த்தவுடன், "வெல்லம் வாங்குங்க ஆச்சி! வீசம் காலணாதான். " என்று கேட்கிறான். "வேண்டாண்டாப்பா! ஆத்துக்காரரு சர்கரை வாங்க வேண்டாமின்னுட்டார். காபியிலே இனி கொஞ்சமா சர்க்கரை போட்டுத்தரணுமாம். இனிப்பெல்லாம் இனிமேல் சாப்பிடமாட்டேன்னுட்டார்." என்கிறாள் ஒரு மாமி.
"ஏண்டி அப்படிச் சொல்றார். ஏதாச்சும் சங்கல்பமா?" ஆச்சரியத்தில் அடுத்த பெண் அப்படிக் கேட்கிறார்.

"அது என்னவோ தெரியலை. சர்க்கரை அதிகம் சாப்பிட்டா சர்க்கரை வியாதி வந்திடுமாமே. வெள்ளைத் துரைமார்க்கு அந்த வியாதி வந்திட்டாண்டி.அதான் இவரும் பயப்படுறார்.அறவே வேணாமின்னுட்டார்!" சிரித்தாள் அந்த மாமி.


பயத்தில் உறைந்து போகிறான் வெல்லம் விற்பவன். :"ஆச்சி! சர்க்கரை வியாதின்னா என்ன?" என்று வினவுகிறான். அவனுக்கு சர்க்கரை விற்பதனால் தனக்கும் வந்துவிட்டால் என்னசெய்வதென்ற பயம்.

 

சர்ர்ர்...... இப்ப இந்தக்காலத்திற்க்கு வந்துவிட்டோம்.
ரோட்டில் போகிற குழந்தைக்குத் தெரியும். சர்க்கரை வியாதின்னா என்னவென்று. இது அறிவின் முன்னேற்றமா அல்லது அதிகமாக அந்தப் பெயர் புழக்கத்தில் உள்ளதாலா.

எதுவாயினும் ஒன்றே ஒன்று. டயாபெடீஸ் இன்றைய ஃபேசன் களில் ஒன்று.
அதற்கு நாம் அடிமைகளானோம் இன்று. காரணம் ரொம்ப சிம்பிள். அந்தக்காலத்தில் பலர் வாழ்ந்தார்கள், சிலர் இருந்தார்கள். இந்தக் காலத்தில் சிலர் வாழ்கிறார்கள்; பலர் இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் ????